காலாவதியான தின்பண்டங்கள் விற்பனை

தியாகதுருகத்தில் காலாவதியான தின்பண்டங்கள் விற்பனை கண்டும், காணாமல் இருக்கும் அதிகாரிகள்

Update: 2022-10-07 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகத்தில் 20-க்கும் மேற்பட்ட இனிப்பு கடைகள், 25-க்கும் மேற்பட்ட உணவகங்கள், 50-க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு தியாகதுருகம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் மளிகை கடைகளில் பாக்கெட்டைகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சில கடைகளில் காலாவதியான தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் ஒரு சில உணவகங்கள் மற்றும் இனிப்பு கடைகளில் செயற்கை வண்ணப்பொடிகளை பயன்படுத்தி உணவு மற்றும் இனிப்புகள் தயார் செய்வதாகவும் கூறப்படுகிறது.

உடல்நலக்குறைவு

உணவு மற்றும் இனிப்புகளில் செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக்கூடாது, ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெயை மறுமுறை பயன்படுத்தக்கூடாது, தின்பண்டங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட வேண்டும் என இப்படி உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் உள்ளன. இதை சிலர் காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள். இதனால் கெட்டுப்போன தின்பண்டங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு தயார் செய்யப்படும் உணவு மற்றும் இனிப்பு ஆகியவற்றை சாப்பிடும் மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.

நேற்று முன்தினம் திருப்பூர் ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 மாணவர்கள் பரிதாமாக இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வு செய்ய வேண்டும்

ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தும் சமையல் எண்ணெயில் தயார் செய்யப்படும் உணவு பதார்த்தங்கள், செயற்கை வண்ணப்பொடிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு பண்டங்கள் இவற்றை வாங்கி சாப்பிடும்போது அவை உடனடியாக உடலுக்கு தீங்கு ஏற்படாவிட்டாலும், அதன் நச்சு சிறிது சிறிதாக உடலில் பாதிப்பை ஏற்படுத்தி ஆளையே கொன்று விடும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வாந்தி-வயிற்றுப்போக்கு

இதுகுறித்து தியாகதுருகத்தை சேர்ந்த அரசு ஆஸ்பத்திரியில் ஓய்வுபெற்ற மருந்தாளுனர் பாண்டியன் கூறும்போது, தியாகதுருகம் பகுதியில் உள்ள சில மளிகை கடைகளில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் காலாவதியான நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை வாங்கி சாப்பிடும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து கடைக்காரர்களிடம் கேட்டால் காலாவதியான தின்பண்டங்களை சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் காலாவதியான பின்பு விற்பனை செய்யப்படுகிறதா? உணவகங்களில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

2 நாட்களில் கெட்டுப்போகிறது

அதேபோல் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் முருகன் கூறும்போது, தியாகதுருகம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இனிப்பு கடைகள் உள்ளன. இங்கு தயார் செய்யப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளை தியாகதுருகம் மற்றும் சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து வாங்கிச் செல்கின்றனர். இதில் ஒரு சில கடைகளில் வாங்கும் இனிப்பு மற்றும் கார வகைகள் தரமற்று இருப்பதாகவும், 2 நாட்களிலேயே அவை கெட்டுப் போவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடைக்காரர்கள் அதிகப்படியான தின்பண்டங்களை தயார் செய்ய தொடங்கியுள்ளனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து இனிப்பகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் இனிப்புகள், காரவகைகள் தயார் செய்ய பயன்படுத்தும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். காலாவதியான மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்