ஊரக வளர்ச்சி துறை செயலாளர்- ராமநாதபுரம் கலெக்டர் நேரில் ஆஜர்

பதவி உயர்வு வழக்கில் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஆகிய இருவரும் மதுரை ஐகோர்ட்டில் நேற்று நேரில் ஆஜர் ஆனார்கள்.

Update: 2022-08-17 19:40 GMT

பதவி உயர்வு வழக்கில் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஆகிய இருவரும் மதுரை ஐகோர்ட்டில் நேற்று நேரில் ஆஜர் ஆனார்கள்.

பதவி உயர்வு வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறேன். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட பதவி உயர்வு அரசாணையில் எனது பெயர் 11-வதாக இருந்தது. ஆனால் எனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. காரணம் கேட்டபோது, முறைகேடு புகார் அடிப்படையில் என் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான தகவல்கள் எனக்கு அளிக்கப்படவில்லை. எனவே எனக்கு உரிய பதவி உயர்வை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

கோர்ட்டு உத்தரவு

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மனுவை பரிசீலித்து பதவி உயர்வு வழங்குகிறோம் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. பின்னர் பதவி உயர்வு பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறி, அந்த அரசாணையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதனை ஏற்க மறுத்த ஐகோர்ட்டு, இது தொடர்பாக விளக்கம் அளிக்க ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை முதன்மைச் செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஊரக வளர்ச்சி செயலாளர்-கலெக்டர் ஆஜர்

அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் அமுதா, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

இதனால் இந்த வழக்கில் உரிய நடவடிக்கைக்கு தாமதமாகிவிட்டது. இந்த வழக்கு குறித்து உரிய அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்