ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு வழக்கு: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊர்வலத்துக்கு பொறுப்பேற்பது யார்?- பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தென் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கேட்ட வழக்கில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊர்வலத்துக்கு பொறுப்பேற்பது யார்? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-10-16 20:19 GMT


ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

ஆயுத பூஜையை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் தென்மாவட்டங்களில் வருகிற 22-ந் தேதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் சீருடை அணிந்து கையில் பாரத மாதா கொடியுடன் ஊர்வலம் நடத்த இருக்கின்றனர். நாட்டில் உள்ள அனைவரையும் சகோதரர்களாக பாவித்து இந்த ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலம் 4-ல் ஒரு பங்கு ரோட்டில் மட்டும் அமைதியாக செல்லும். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு இருக்காது. இந்த அமைப்பு தடை செய்யப்படவில்லை. அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகள் வேண்டுமென்றே இந்த அமைப்புக்கு மட்டும் மறுக்கப்படுகிறது", என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "மனுதாரர் தரப்பு இந்த விவகாரத்தில் உணர்ச்சி வசப்பட வேண்டிய தேவையில்லை. கோர்ட்டு அனைவருக்கும் பொதுவான இடம்", என்று குறிப்பிட்டார்.

20 இடங்கள்

அதேபோல, மனுதாரரின் வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு கூடுதல் தலைமை வக்கீல் வீரா கதிரவன், அரசு குற்றவியல் வக்கீல் அன்புநிதி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளில் என்னென்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது தெரியவருகிறது. தென் மாவட்டங்களில் 20 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ். வினியோகம் செய்யும் துண்டு பிரசுரங்களில் மதப்பிரிவினை குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும். இந்த அமைப்பு எந்த சட்டவிதிகளின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கமா, அறக்கட்டளையா, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியா? என்ற எந்த தகவலும் இல்லை.

நிர்வாகிகள் யார், அவர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனரா, ஊர்வலத்தின் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு? ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

அத்துடன், தேவர் குருபூஜைக்காக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். இந்த சமயத்தில் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்தால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் சிரமம் ஏற்படும். எனவே தென்மாவட்டங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று வாதிட்டனர்.

பொறுப்பேற்பது யார்?

இதைபதிவு செய்து கொண்ட நீதிபதி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊர்வலத்துக்கு யார் பொறுப்பேற்பது, ஊர்வலம் ஆரம்பிக்கும் இடம். முடிவடையும் இடம்? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்