ரூ.78 லட்சத்தில் பேட்டரி வாகனம், அரவை எந்திரம்-அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்
ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.78 லட்சத்தில் வளமீட்பு மையத்திற்கு அரவை எந்திரம் மற்றும் 6 புதிய வாகனங்களை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.
ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.78 லட்சத்தில் வளமீட்பு மையத்திற்கு அரவை எந்திரம் மற்றும் 6 புதிய வாகனங்களை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.
வளமீட்பு மையம்
ராணிப்பேட்டை நகராட்சியில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் சராசரியாக தினமும் 6.7 டன் பிளாஸ்டிக் கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. அவை சந்தை மேட்டில் உள்ள வளமீட்பு மையத்தில் அரைக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகள், சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தற்போது 3 டன் கொள்ளளவு கொண்ட புதிய வளமீட்பு மைய கட்டிடம் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
மேலும் இந்த மையத்தில் தொழில் நிறுவனங்களின் சமூக நிதியில் இருந்து ரூ.24 லட்சத்தில் அரவை எந்திரத்தை வழங்கி, பிளாஸ்டிக் பொருட்கள் அரவை செய்யப்படுவதை அமைச்சர் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து 15-வது நிதி குழு மானிய நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் 3 பேட்டரி வாகனங்கள், ரூ.21.90 லட்சம் மதிப்பில் 3 இலகுரக வாகனங்கள் என மொத்தம் ரூ.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டிடம், வாகனங்கள் மற்றும் எந்திரத்தை அமைச்சர் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா, நகராட்சி ஆணையாளர் விநாயகம், வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர், நகராட்சி அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.