ரூ.550 கோடியில் பூண்டி ஏரியின் உயரத்தை உயர்த்த திட்டம் - பொதுப்பணித்துறை

ரூ.550 கோடி மதிப்பீட்டில் பூண்டி ஏரியின் உயரத்தை 2 அடி உயர்த்தி கூடுதலாக 1½ டி.எம்.சி தண்ணீர் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2023-02-17 10:55 GMT

பூண்டி ஏரி

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் சென்னை நகர குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றான சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் உள்ளது. ரூ.65 லட்சம் செலவில் 1939-ல் இந்த நீர்த்தேக்க கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு 1944-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.

அப்போதைய சென்னை மேயராக இருந்த சத்தியமூர்த்தி இந்த நீர்த்தேக்கத்தை கட்ட பெரும் முயற்சிகள் மேற்கொண்டதால் இந்த நீர்தேக்கத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. தற்போது பூண்டி ஏரி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது. 8 ஆயிரத்து 458 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நீர் தேக்கத்தின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

வீணாக கடலில் கலக்கிறது

இந்த நீர்த்தக்கத்தில் மழைநீர் மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். மேலும் நீர்த்தேக்கம் முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும்.

கடந்த டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்ததால் ஏரி முழுவதுமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டு அது வீணாக கடலில் போய் சேர்ந்தது.

2 அடி உயர்த்த நடவடிக்கை

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 11-ந் தேதி தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பூண்டி ஏரியை ஆய்வு செய்தார். அப்போது உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து ஏரியின் உயரத்தை 2 அடி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு பூண்டி நீர்த்தேக்கத்தை 2 அடி உயர்த்துவதற்காக அரசாணையும் வெளியிட்டது. ஏற்கனவே நீர்த்தேக்கத்தில் 3.231 டி.எம்.சி. நீர் சேமித்து வைக்கக் கூடிய வகையில் பூண்டி நீர்த்தேக்கம் இருப்பதால் மேலும் 1½ டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க ஏதுவாக நீர்த்தேக்கத்தை மேலும் 2 அடி உயரம் அதிகரிப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ரூ.550 கோடியில்

இதற்காக அரசு ரூ.550 கோடி ஒதுக்கியது. நீர்தேக்கத்தை 2 அடி உயரம் உயர்த்துவதற்காக கரையின் வெளிப்புற மற்றும் கரையின் கீழ் மண் தன்மை குறித்தும் 6 பகுதிகளில் நவீன கருவிகளைக் கொண்டு மண் பரிசோதனை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்