கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Update: 2022-10-11 18:45 GMT


தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் சிறப்புரையாற்றினார்.

இதில் மாநில பொருளாளர் பெருமாள், மாநில துணை செயலாளர்கள் ரவீந்திரன், ஸ்டாலின்மணி, மாநில துணைத்தலைவர் டில்லிபாபு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேல்மாறன், மாவட்ட தலைவர் தாண்டவராயன், செயலாளர் முருகன், பொருளாளர் சிவராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல் மூட்டைகள் தேக்கம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. பருவமழை தொடங்கவுள்ள நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் ஈரப்பதத்தின் அளவு 17 சதவீதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஈரப்பதத்தின் அளவு 22 சதவீதம் வரை இருந்தாலும் கொள்முதல் செய்ய வேண்டும்.

தற்போது பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். நெல் கொள்முதல் செய்வதில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது மத்திய, மாநில அரசுகள் சேர்ந்தே கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,900தான் வழங்குகின்றன. எனவே கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்