சமையல் கியாஸ் விலை ரூ.200 குறைப்பு மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா?

சமையல் கியாஸ் விலை ரூ.200 குறைப்பு மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா? என்பது குறித்து இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-08-30 19:17 GMT

சமையல் கியாஸ் என்பது ஒரு நேரத்தில் வசதியானவர்கள் சமையலறைகளில் மட்டுமே இருந்து வந்தது. மத்திய, மாநில அரசுகளின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்தின் விளைவாக ஏழைகளின் சமையலறைக்கும் அது இப்போது வந்துவிட்டது.

கியாஸ் இல்லாமல் சமையலறைகள் இல்லை என்ற இலக்கை நோக்கி இன்றைக்கு நாம் நகர்ந்து வருகிறோம்.

அரசு மானியம்

முன்பு எல்லாம் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு கணிசமாக மானியத் தொகை வழங்கியதால் வெறும் ரூ.50, ரூ.100 விலைக்குகூட சிலிண்டர் வாங்கிய காலம் உண்டு.

நாள் போக்கில் அந்த மானியத் தொகை குறைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் சிலிண்டரை முழுத் தொகை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும், அவரவர் வங்கிக் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அனைவரும் முழுத்தொகை கொடுத்து வாங்கும் மனநிலைக்கு வந்துவிட்டவுடன் மானியத்தை வங்கிகளில் செலுத்துவதை கொஞ்சம், கொஞ்சமாக அரசு நிறுத்திவிட்டது. இதனால் ரூ.1000-க்கு மேல் சிலிண்டரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு அனைவரும் தள்ளப்பட்டனர்.

விலை நிர்ணயம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியாகிறது.

அதேபோல், ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

வரவேற்பு

அந்த வகையில், கடந்த 1-ந்தேதி வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.92.50 குறைக்கப்பட்டு ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. ஆனால் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,118 விலையில் விற்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் வீட்டு சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துவிடுமோ? என்று இல்லத்தரசிகளுக்கு ஒருவித அச்சம் மேலோங்க இருந்து வந்தனர். இந்தநிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பரிசாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்களின் சுமையை குறைக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை இல்லத்தரசிகள் மனதார வரவேற்று உள்ளனர்.

குற்றச்சாட்டு

இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலும் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

எனவே இந்த திடீர் விலை குறைப்பு மக்களின் மாதாந்திர பட்ஜெட் சுமையை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதா? அல்லது எதிர்வரும் தேர்தலை மனதில்கொண்டு அறிவிக்கப்பட்டதா? என்பது குறித்து இல்லத்தரசிகள் வெளியிட்டு இருக்கும் கருத்து வருமாறு:-

ஆறுதல் தருகிறது

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த அஞ்சலி:- கடந்த சில மாதங்களாக அரிசி, பருப்பு, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் மாத சம்பளத்தில் எங்களைப் போல் உள்ளவர்கள் மளிகை பொருட்கள் காய்கறிகள் வாங்குவது மிகவும் சிரமமாக இருந்து வந்தது. இந்த நிலையில் சிலிண்டரின் விலை ரூ.200 குறைத்திருப்பது சற்று ஆறுதலை தருகிறது. இதே போல் மளிகைப் பொருட்கள், காய்கறிகளின் விலையும் குறைந்தால் நன்றாக இருக்கும்.

வாணியம்பாடியை சேர்ந்த பத்மினி மகேந்திரன்:-கடந்த ஒரு ஆண்டாக அளவுக்கு அதிகமாக உயர்ந்து வந்த கியாஸ்சிலிண்டர் விலை, தற்போது திடீரென ரூ.200 குறைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளுக்கு நாள் காய்கறி விலை உயர்வு, மளிகை பொருட்கள் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் இதுபோன்ற அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருப்பது ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து இதுபோன்று மேலும் விலை உயர்வு ஏற்படாமல் தடுத்திடவும் அரசு முன்வர வேண்டும்.

தேர்தலுக்காக இருக்கக்கூடாது

காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த லட்சுமி தேவி ராஜா:- சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்துக்கு மாதம் உயர்ந்து கொண்டே சென்றது. ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்ததால் சிலிண்டரின் விலை 1,500 ரூபாயை தாண்டி விடுமோ என பயந்தோம். தற்போது ரூ.1,200 வரை கொடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கிக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் சிலிண்டர் விலை ரூ.200 குறைந்துள்ளது. இது இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. இன்னும் விலையை குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அப்போதுதான் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் சமையல் செய்ய முடியும்.

திருவண்ணாமலை கோசாலையை சேர்ந்த புஷ்பாசேகர்:- வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர் ரூ.1150-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம். அத்துடன் நிறுத்தி கொள்ளாமல், இன்னும் கியாஸ் சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சொர்ப்ப வருமானத்தில் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் பெண்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இது வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பாக இல்லாமல் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கியாஸ் சிலிண்டரின் விலையை இன்னும் குறைக்க வேண்டும். அத்துடன் பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்