விழுப்புரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகைகள் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-05 18:45 GMT

தனியார் நிறுவன ஊழியர்

விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தை அடுத்த புதுக்குப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் தவக்குமார் (வயது 32), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி சுபஸ்ரீ (28). இவர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியின்போது அவர்கள், சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளனர்.

அதன் பிறகு தவக்குமாரின் தந்தை சுப்பிரமணியன், தனது வீட்டில் இருந்து மகன் தவக்குமார் வீட்டிற்கு சென்று தினமும் இரவு 7.30 மணியளவில் மின்விளக்கு போடுவதும், மறுநாள் காலையில் சென்று மின்விளக்கை நிறுத்தி வருவதுமாக இருந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன், தனது மகன் வீட்டுக்கு சென்று மின்விளக்கை போட்டுவிட்டு வந்தார். பின்னர் நேற்று காலை 6 மணியளவில் தவக்குமார் வீட்டுக்கு சென்றபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

நகைகள் கொள்ளை

உடனே வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கிருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 20 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக அவர், கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.8 லட்சமாகும்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்