உசிலம்பட்டியில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.8 லட்சம் - 11½ பவுன் நகை கொள்ளை
உசிலம்பட்டியில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து ரூ.8 லட்சம்-11½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற 4 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து ரூ.8 லட்சம்-11½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற 4 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை, பணம் கொள்ளை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் புதுராஜா(வயது 40). செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கீதா லெட்சுமி, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பகலில் வேலைக்கு சென்ற நிலையில் இவர்களது 12 வயது மகள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். இந்தநிலையில் மதியம் 1 மணியளவில் புதுராஜா வீட்டிற்கு ஜோசியம் பார்க்கும் 4 பெண்கள் வந்தனர். அவர்கள் குடிநீர் கேட்பது போல புதுராஜாவின் மகளிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் அவரை திசை திருப்பி வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த ரூ.8 லட்சம், 11½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
வழக்கம் போல இரவு வீட்டிற்கு வந்த புதுராஜா, கீதா லெட்சுமியும் வீட்டின் பீரோ திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சோதனை செய்தபோது அதில் இருந்த பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து தனது மகளிடம் கேட்ட போது, ஜோசியம் பார்க்கும் பெண்கள் குடிநீர் கேட்டு வீட்டிற்கு வந்ததை தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஜோசியம் பார்க்கும் 4 பெண்களும், புதுராஜா வீட்டிற்கு வருவதும், பின்பு வேக வேகமாக இந்த இடத்திலிருந்து வெளியேறி சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தன. இந்த கண்காணிப்பு காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோசியம் பார்ப்பது போல வந்து 4 பெண்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உசிலம்பட்டி பகுதியில் அடுத்தடுத்து ஒன்றரை மாதத்தில் 5-வது கொள்ளை சம்பவமாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அடுத்தடுத்து அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களால் உசிலம்பட்டி பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.