வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் ரூ.6½ லட்சம் நகை-பணம் கொள்ளை

மேல்மலையனூர் அருகே வீடு புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் ரூ.6½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசாா் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-08-23 18:45 GMT

மேல்மலையனூர்

சென்னை பயணம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் காளிரத்தினம்(வயது 60). விவசாயி. இவருடைய மனைவி சோலையம்மாள் (54). இந்த நிலையில் காளிரத்தினம் சென்னையில் நடைபெற்ற உறவினரின் திருமணத்துக்காக நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றார். இதனால் சோலையம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

கத்தியை காட்டி மிரட்டல்

பின்னர் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சோலையம்மாளை தட்டி எழுப்பினர். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர், மர்ம நபர்களை கண்டு கூச்சலிட முயன்றார்.

அப்போது அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சோலையம்மாளிடம் இருந்து சாவியை வாங்கி பீரோவின் கதவை திறந்து அதில் இருந்த 14¼ பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதன் பின்னர் சோலையம்மாள் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர். கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.6½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீஸ் வலைவீச்சு

இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கத்திமுனையில் விவசாயி மனைவியிடம் ரூ.6½ லட்சம் நகை-பணத்தை மர்ம நபா்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்