அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.55 லட்சம் மோசடி: புதுகோட்டையை சேர்ந்த பட்டதாரி கைது

மோசடியில் ஈடுபட்டதாக சசிகுமார் என்ற பிரான்சிஸ் ஜெரால்டை புதுக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

Update: 2023-04-17 09:51 GMT

புதுக்கோட்டை,

காஞ்சிபுரம் அனகாபுத்தூர் திம்மசமுத்திரம் திவ்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் என்ற பிரான்சிஸ் ஜெரால்டு (வயது 36). இவர் தமிழகம் முழுவதும் பட்டதாரி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி வரை மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் கடந்த மாதம் சில நாட்கள் தங்கியிருந்த அவர் ஆலங்குடி, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருவரங்குளம் பகுதியை சேர்ந்த படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் விபரங்களை சேகரித்துள்ளார். பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு தனக்கு அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, அமுதா ஐ.ஏ.எஸ்., உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நன்கு தெரியும். அவர்களிடம் பேசி உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார்.

இதனை நம்பி அவரிடம் வந்த 11 பேரிடம் ரூ.55 லட்சம் வரை பணம் வசூல் செய்துள்ளார். ஆனால் கூறியபடி அரசு வேலை எதுவும் வாங்கித்தரவில்லை. மேலும் பணத்தை திருப்பி கேட்டபோது மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆலங்குடி போலீசில் பணத்தை இழந்தவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த மோசடியை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து இன்று சசிகுமாரை புதுக்கோட்டை மாவட்ட போலீசார் காஞ்சிபுரத்தில் வைத்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை புதுக்கோட்டை அழைத்து வந்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்