கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்குக் காரணமானவருக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு - பழனிசாமி, அண்ணாமலை கண்டனம்

கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கியதாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-05-17 02:00 GMT

சென்னை,

கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அமாவாசை என்பவருக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு காரணமானவர் என்று இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ள அம்மாவாசை என்பவர் திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் என்கிறவருடைய தம்பி ஆவார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாவாசை தானும் அந்த மதுபானத்தை அருந்தியதாக அவரும் மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொண்டார்.

இந்நிலையில் போலி மதுபான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அம்மாவாசைக்கு இந்த அரசு போலி மதுபானத்தால் பாதிக்கபட்டவருக்கு வழங்கப்படும் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கி இருக்கிறது. இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும். சில நாட்களுக்கு முன்னாள் ஒருவர் தன்னை மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் கேப்டன் என்று பொய் சொல்லி முதல்வரை சந்தித்து ஒருவர் பரிசு பெற்று செல்கிறார் தற்போது என்னவென்றால் கள்ளச்சாராயம் காய்ச்சி உயிரைப் பறித்தவர்க்கு அவரின் செயலை பாராட்டி பரிசு கொடுப்பது போல் நிவாரணம் கொடுக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே, ஏன் இந்த உலகத்துலேயே குற்றவாளிக்கு நிவாரணம் வழங்குகின்ற கோமாளித்தனமான ஒரே அரசு தற்போது ஆட்சியிலுள்ள திமுகவின் விடியா அரசு தான்! நிர்வாக திறன் அற்ற முதல்வரின் தலைமையில் ஆட்சி நடக்கவில்லை இங்கே சர்க்கஸ் தான் நடக்கிறது" என்று கூறியுள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்குக் காரணமானவர் என்று அமாவாசை என்பவர் மீது காவல்துறை வழக்குத் தொடுத்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அமாவாசை சித்தாமூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளரின் சகோதரர் ஆவார். கைதிலிருந்து தப்பிப்பதற்காக தானும் கள்ளச்சாராயம் உட்கொண்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாடகமாடியுள்ளார் அமாவாசை. அவருக்கும் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது இந்த திறனற்ற திமுக அரசு" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்