சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2023-08-24 07:24 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023) இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33) என்பவர், சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

இளம் வயதில் உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்