ராஜபாளையம் மில் அதிபரிடம் ரூ.4.20 கோடி மோசடி: வாலிபர் கைது

ராஜபாளையத்தை சேர்ந்த மில் அதிபரிடம் ரூ. 4 கோடியே 20 லட்சம் மோசடி செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தாயார் மற்றும் சகோதரியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-08-24 18:45 GMT

விருதுநகர்

ராஜபாளையத்தை சேர்ந்த மில் அதிபரிடம் ரூ. 4 கோடியே 20 லட்சம் மோசடி செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தாயார் மற்றும் சகோதரியை போலீசார் தேடி வருகின்றனர்.

மில் அதிபர்

ராஜபாளையம் மீனாட்சி டாக்கீஸ் தெருவை சேர்ந்த மில் அதிபர் ராமசுப்பிரமணியன் (வயது 60). இவருக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் மதுரையை சேர்ந்த சித்த வைத்தியரிடம் சிகிச்சைக்கு சென்றபோது அவர் ஏழை எளியோருக்கு உதவி செய்தால் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக கூறியதுடன் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த செல்வி என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.

ரூ.4 கோடி

இந்நிலையில் செல்வி தனது கணவர் அதிக கடன் வாங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமல் இறந்து விட்டதாகவும் தனக்கு சஞ்சய் குமார் (27), பிருந்தா, புனித குமார், கவுதம் குமார் என்ற நான்கு குழந்தைகள் உள்ளதாக தெரிவித்ததோடு மில் அதிபர் ராமசுப்பிரமணியிடம் தனக்கு பண உதவி செய்தால் பூர்வீக சொத்துக்களை விற்று மீண்டும் பணத்தை திருப்பி தந்து விடுவதாக தெரிவித்தார்.

தனக்கு நர்சு வேலை வாங்குவதற்காகவும் தனது குழந்தைகள் படிப்புச் செலவுக்காகவும் என பல தவணைகளாக கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை நேரடியாகவும் வங்கி கணக்கு மூலமாகவும் ரூ.4 கோடியே 20 லட்சம் வரை பெற்றதாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல்

மில் அதிபர் ராமசுப்பிரமணியம் செல்வியிடம் பணத்தை திரும்ப கேட்ட போது, செல்வி அவரது மகன் சஞ்சய் குமார், மகள் பிருந்தா ஆகிய மூன்று பேரும் பணத்தை திருப்பி கேட்டால் கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமசுப்பிரமணியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளிடம் புகார் செய்தார்.

விசாரணை

போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் செல்வி, அவரது மகன் சஞ்சய் குமார், மகள் பிருந்தா ஆகிய மூன்று பேர் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சஞ்சய்குமாரை கைது செய்து செல்வி மற்றும் பிருந்தாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்