நெல்லையில் ரூ.41½ கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் சபாநாயகர் அப்பாவு பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்

நெல்லையில் ரூ.41½ கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காெணாலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். நெல்லையில் நடந்்த விழாவில் சபாநாயகர் அப்பாவு பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான சாவிகளை வழங்கினார்.

Update: 2022-06-10 22:22 GMT

நெல்லை:

நெல்லையில் ரூ.41½ கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காெணாலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். நெல்லையில் நடந்்த விழாவில் சபாநாயகர் அப்பாவு பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான சாவிகளை வழங்கினார்.

குடியிருப்புகள்

நெல்லை ரெட்டியார்பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பகுதி-1 பிரிவில் ரூ.41 கோடியே 63 லட்சத்தில் 480 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனை நேரலையில் காணொலிக்காட்சி வாயிலாக காணும் வகையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு நடந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர்‌ பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயனாளிகளுக்கு சாவிகள்

தொடர்ந்து ரெட்டியார்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் சபாநாயகர் அப்பாவு குத்துவிளக்கு ஏற்றினார். அங்குள்ள குடியிருப்புகளை பார்வையிட்ட அவர், குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் வீடுகள் ஒதுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளையும், சாவிகளையும் வழங்கி பேசினார். அப்போது சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

6,800 வீடுகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்-அமைச்சராகவும் இருந்தார். அப்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் குடிசை வீடுகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று 70 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டி கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

அதேபோன்று தற்போதும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி கொடுத்துள்ளார். தற்போது தமிழகம் முழுவதும் 6,800 புதிய வீடுகளை திறந்து வைத்து உள்ளார். தமிழ்நாட்டில் வீடு இல்லாத ஏழைகளே இருக்கக்கூடாது என்று உயரிய நோக்கத்தில் செயலாற்றி வருகிறார்.

சரக்கு சேவை வரி

பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த முதல்-அமைச்சர், அவரிடம் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்றார். இந்த வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், சரக்கு சேவை வரியில் தமிழகத்திற்கு வரக்கூடிய பங்கு வரவில்லை என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு வரக்கூடிய சரக்கு சேவை வரி பங்கு உடனே விடுவிக்கப்பட்டது. இப்படி தமிழ்நாட்டின் நலனுக்காக அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், மாநகராட்சி கவுன்சிலர் வில்சன் மணித்துரை, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் சாந்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் போர்வெல் கணேசன், ஜோசப் பெல்சி, ஆரோக்கிய எட்வின், பாளையங்கோட்டை யூனியன் துணைத்தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்