சுகாதார ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி; பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 4 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-04-27 20:58 GMT

சேலம்,

சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது40). இவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

என்னுடைய மகள் ஜோதி பி.எஸ்சி. முடித்துள்ளார். அவருக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தேன். இந்தநிலையில், கடந்த 2021-ம் ஆண்டு உறவினர் ஒருவர் மூலம் சேலத்தைச் சேர்ந்த சின்னான் என்பவர் அறிமுகமானார்.

அவர் எனது மகளுக்கு மாரமங்கலத்துப்பட்டியை சேர்ந்த கவுதம் என்பவர் மூலம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார். இதற்காக ரூ.10 லட்சம் கொடுத்தால் 3 மாதத்தில் அந்த வேலையை வாங்கி தருவதாக கூறினார். இதை உண்மை என நம்பி நான் அவர்களிடம் ரொக்கமாகவும், வங்கி மூலமாகவும் ரூ.10 லட்சம் கொடுத்தேன்.

போலி பணி ஆணை

இதையடுத்து அவர்கள் பணி நியமன ஆணையை எனது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பினர். ஆனால் அது சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் மூலம் அனுப்பப்பட்ட போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கவுதம், சின்னான், மகேஸ்வரி ஆகியோர் சேர்ந்து சுதா உள்பட 4 பேரிடம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கவுதம், சின்னான், மகேஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்