கார் பரிசாக விழுந்ததாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி; ஏமாந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

கார் பரிசாக விழுந்ததாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதையடுத்து ஏமாந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-27 21:43 GMT

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சரவணன் (வயது 32). பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அவரது செல்போனை தொடர்பு கொண்ட மர்ம கும்பல் குலுக்கல் முறையில் உங்கள் செல்போன் எண் தேர்வாகி உள்ளது. கார் பரிசாக தருவதாக கூறி உள்ளனர்.

மோசடி

இதனை நம்பிய சரவணன் மோசடி கும்பல் கொடுத்த செல்போன் எண்களுக்கு கூகுள் பே மூலம் தவணை முறையில் தினேஷ், பூஜா ராணி, ரஞ்சினி தேவி ஆகியோருக்கு ரூ.4½ லட்சம் அனுப்பி உள்ளார்.

ஒரு வாரம் கழித்து சரவணன் தன்னை தொடர்பு கொண்ட செல்போன் எண்ணுக்கு மீண்டும் அழைத்தபோது அனைத்து எண்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட சரவணன் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் தெரிவித்தார். பின்னர் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்