"ரூ.20 இருந்தால் ஒரு நாள் சாப்பாட்டை அம்மா உணவகத்தில் முடித்துவிடலாம்"-பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பது பற்றி மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

“ரூ.20 இருந்தால் ஒரு நாள் சாப்பாட்டை அம்மா உணவகத்தில் முடித்துவிடலாம்” என்று பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Update: 2022-09-29 20:19 GMT

"ரூ.20 இருந்தால் ஒரு நாள் சாப்பாட்டை அம்மா உணவகத்தில் முடித்துவிடலாம்" என்று பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பக்தர்களிடம் வசூல்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் கல்யாண சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் பிரசித்தி பெற்றது. புரட்டாசி மாதத்தில் இங்கு நடைபெறும் விழாக்களின்போது அன்னதானம் வழங்கப்படும். ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இந்த கோவில் வனப்பகுதியில் இருப்பதால், தற்போது குறிப்பிட்ட எல்லையில் வனத்துறை ஊழியர்கள், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தலா ரூ.20 வசூலிக்கின்றனர்.

தடை கோரி மனு

அதற்கு முன்புவரை எந்தவிதமான கட்டணத்தையும் பக்தர்களிடம் வசூலித்ததில்லை. இது புதிய நடைமுறையாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விதிகளை மீறி, கட்டணம் வசூலிப்பது ஏற்கத்தக்கதல்ல.

எனவே ரூ.20 வசூலிப்பதை நிறுத்த நடவடிக்கைகோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லை. எங்கள் மனு அடிப்படையில் செண்பகத்தோப்பு சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் ரூ.20-ஐ வனத்துறையினர் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அம்மா உணவகத்தில் ரூ.20-க்கு உணவு

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, "பக்தர்களால் வனப்பகுதியில் குப்பை சேருகிறது. இதை அகற்ற அவர்களிடம் ரூ.20 வசூலிக்கிறார்கள்" என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "வனப்பகுதியை சுத்தம் செய்வதற்கு அரசிடம் நிதியை கேட்டு பெற வேண்டும்" என்றனர்.

மேலும், வனப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும். என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அப்போது மனுதாரர் வக்கீல், கோவில் விழாவில் அன்னதானம் சாப்பிட வரும் ஏழை பக்தர்களிடம் ரூ.20 வசூலிப்பதை ஏற்க இயலாது என்றார்.

அதற்கு நீதிபதிகள், 20 ரூபாய் இருந்தால் அம்மா உணவகத்தில் ஒரு நாள் சாப்பாட்டை முடித்துவிடலாம். திடீரென வனத்துறையினர் கட்டணம் வசூலிப்பது எப்படி? எனவே மனுதாரர் கோரிக்கை குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்