ஒரு நடிகரின் பின்னால் ஆட்டு மந்தைபோல் திரும்பும் இளைஞர்கள் விசிகவுக்கு தேவை இல்லை: திருமாவளவன்

திமுகவுடன் சேர்ந்துதான் தேர்தலை சந்திப்போம் என்று திருமாவளவன் கூறினார்.;

Update:2025-03-17 09:39 IST
ஒரு நடிகரின் பின்னால் ஆட்டு மந்தைபோல் திரும்பும் இளைஞர்கள் விசிகவுக்கு தேவை இல்லை: திருமாவளவன்

விழுப்புரம்,

விழுப்புரத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

கட்சியின் மறுசீரமைப்புக்கான அறிவிப்பில் அடுத்த மாதம்(ஏப்ரல்) 4-ந் தேதிக்கு பின் கவனம் செலுத்தி அறிவிப்புகளை வெளியிட உள்ளேன். கொள்கை பிடிப்பு உள்ள இளைஞர்களை உருவாக்குவோம் என்கிற உறுதிபாட்டோடு தான் நான் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டேன். களத்தில் இறங்கினேன்.

தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும், சட்டமன்ற, நாடாளுமன்ற அவைக்கு செல்ல வேண்டும் என்றோ, தேர்தல் ஆணயைத்தின் அங்கீகாரம் பெறும் அரசியல் கட்சியாக வளர்த்து எடுக்க வேண்டும் என்றோ எந்த திட்டமும் இல்லை. சூது, சூழ்ச்சி, பழிகளை அள்ளி வீசுகிற அரசியல் களத்தில் எந்த பின்பலமும் இல்லாமல் தாக்குபிடித்து நிற்கிறோம் என்பது தான் நமது வெற்றி, சாதனை ஆகும்.

நடிகர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம் விசிக-தான் பலவீனப்படும் என பேசுவார்கள். விஜயகாந்த் கட்சித் தொடங்கியபோதும் சொன்னார்கள். இப்போதும் சொல்கிறார்கள். ஆனால் யார் கட்சித் தொடங்கினாலும், அவர்களுக்கு என்ன செல்வாக்கு இருந்தாலும், விசிகவை அவர்களால் சேதப்படுத்த முடியாது. சினிமா கவர்ச்சியின் மூலமாக இளைஞர்களை திசைமாற்றி விட முடியாது. ஒரு நடிகரின் பின்னால் ஆட்டு மந்தை போல் இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால், அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்குத் தேவை இல்லை.

திருமாவளவன் 25 ஆண்டுகளாக ஒரு பட்டாளத்தை விடுதலை சிறுத்தைகள் அதே வேகத்தில் வைத்துக் கொண்டுள்ளது. எந்த சரிவும் ஏற்படவில்லை, வீழ்ச்சியும் இல்லை. ஒரு அரசியல் கட்சியை 25 ஆண்டுகள் கடந்து தாக்குப் பிடிப்பதே சாதனை, வெற்றி. திமுக மற்றும் அதிமுக. கட்சிகளுடன் இணைந்து இருப்பதால் தான் வெற்றி கிடைப்பதாக சிலர் ஏளனம் பேசி வருகின்றனர்.

பாமக, தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகளும் தங்கள் செல்வாக்கை நிரூபித்து தான் கூட்டணியில் இணைந்துள்ளன. ஆண்ட கட்சிகள் தான் விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு வேண்டும் என விரும்பும் நிலைக்கு நாம் உறுதியாக இருக்கிறோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் விசிகவுக்கு கூடுதல் இடங்களை கேட்டுப் பெற முயற்சிப்போம். கூடுதல் இடங்களுக்காக அணி மாறமாட்டோம்; திமுகவுடன் சேர்ந்துதான் தேர்தலை சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்