'பா.ஜ.க. அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது' - அமைச்சர் ரகுபதி

பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.;

Update:2025-03-17 17:13 IST
பா.ஜ.க. அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது - அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"மாற்றுக் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை ஏவி பா.ஜ.க. அரசு பழிவாங்குகிறது. அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பா.ஜ.க. பயன்படுத்துகிறது.

அமலாக்கத்துறை சோதனை நடத்தி இத்தனை நாட்களாகியும், இதுவரை ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான எந்த ஆதாரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை. இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவாக மறுத்துள்ளார்.

டெல்லி பாணியில் தமிழகத்தில் அரசியல் செய்துவிடலாம் என பா.ஜ.க. கனவு கண்டு கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். எனவே, இங்கு பா.ஜ.க.வின் பாய்ச்சல் செல்லுபடி ஆகாது.

மும்மொழிக் கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக, நமது பிள்ளைகளின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, இந்தி திணிப்பை வலியுறுத்தி பா.ஜ.க. அரசு நமக்கு தர மறுக்கிறது. அதே போல் 100 நாள் வேலை திட்டத்திற்காக சுமார் 100 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு மத்திய பா.ஜ.க. அரசு தர மறுக்கிறது.

இதையெல்லாம் கண்டித்து தமிழ்நாட்டில் இருக்கும் பா.ஜ.க., தமிழக மக்களின் நலனுக்காக போராட தயாராக இருக்கிறதா? அவ்வாறு போராடினால் ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கத்திற்கு வருவார்கள். ஆனால் அவர்கள் போராட தயாராக இல்லை. ஏனெனில் தமிழக மக்கள் நலன் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.

அமலாக்கத்துறையை பழிவாங்கும் செயல்களுக்காக பயன்படுத்துகிறார்களே தவிர, அவர்களால் எந்த குற்றச்சாட்டும் கூற முடியாது. எங்கள் மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த தவறுக்கும் இடம் கொடுக்க மாட்டார்."

இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்