தேதியே அறிவிக்காமல் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - அண்ணாமலை

தமிழக பா.ஜ.க. சார்பில் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.;

Update:2025-03-17 10:16 IST
தேதியே அறிவிக்காமல் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - அண்ணாமலை

தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும், மதுவிலக்கு துறையின் இன்றைய அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.

இந்த நிலையில் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் இன்று காலை முதல் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எச். ராஜா மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோரின் வீடுகளுக்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? தேதியே அறிவிக்காமல், போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தி.மு.க. அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க. சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தி.மு.க. அரசு, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் கவர்னருமான, அக்கா தமிழிசை சவுந்தரராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் வினோஜ் பி.செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்