தென்காசி சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

தென்காசி சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-28 17:41 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்திலிருந்து வீரகேரளம்புதூர் வட்டம், சுரண்டை காவல் சரகம், ஆணைகுளம் கிராமத்திற்கு இன்று (28.08.2024) காலை சுமார் 6.00 மணியளவில் விவசாய வயல் வேலைக்காக 17 நபர்கள் நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது வீரகேரளம்புதூர், சுரண்டை பகுதி-1 கிராமம், வாடியூர் மேல்புறம் சாலையின் வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக நான்கு சக்கர வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த திருச்சிற்றம்பலம் கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த வள்ளியம்மாள், பிச்சி மற்றும் ஜானகி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 14 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்