பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.13½ லட்சம் அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை

பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.13½ லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

Update: 2022-09-08 07:53 GMT

சென்னை மாநகராட்சி பூங்காத்துறையின் சார்பில் 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 571 பூங்காக்களின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பூங்கா பராமரிப்பு பணிகளில் காவலர், தூய்மை பணியாளர் மற்றும் தோட்டப் பராமரிப்பாளர்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையை விட குறைவான அளவில் இருந்தால் ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

பூங்காவை சரிவர சுத்தம் செய்யாவிடில் நாளொன்றுக்கு ரூ.600-ம், கழிவறை பகுதிகளை சரிவர சுத்தம் செய்யாவிட்டால் நாளொன்றுக்கு ரூ.2 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படுகிறது. பூங்காவில் உள்ள மரம், செடி, கொடி மற்றும் புல்தரைகளை பராமரிப்பதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் 4 ஆயிரம் சதுர அடி வரையிலான பூங்காக்களில் ரூ.2 ஆயிரத்து 500-ம், 4 ஆயிரம் சதுர அடிக்கு மேலான பூங்காக்களில் ரூ.15 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது.

பூங்காத்துறையின் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரை (5 மாதத்தில்) மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.13 லட்சத்து 68 ஆயிரத்து 788 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்