விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை

பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-27 18:45 GMT

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 48), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு மாடி வீட்டை பூட்டிவிட்டு, கீழ்தளத்தில் குடும்பத்துடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை செல்வகுமாரின் மகள் படிப்பதற்காக மாடிக்கு சென்றார். அப்போது மாடி வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மகள் இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதில் பதறிய செல்வகுமார் மற்றும் குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 26 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்தை காணவில்லை.

செல்வகுமார் குடும்பத்துடன் கீழ் தளத்தில் தூங்குவதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் வீட்டின் மேல்மாடிக்கு சென்று கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மேற்பார்வையிலான தனிப்படை போலீசாரும் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்