ரூ.1,000 கோடியில் வெள்ள நிவாரண தொகுப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.

Update: 2023-12-30 08:22 GMT

சென்னை, 

தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவை இந்த மாதம் சந்தித்தது. முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பின்னர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

இதில் வீடுகள், சாலைகள், பல்வேறு கட்டமைப்புகள் என அதிக அளவிலான சேதங்கள் ஏற்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் இறந்தன. இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையை வழங்கி வருகிறது. மேலும் இந்த வெள்ள பாதிப்பிற்காக நிவாரணம் வழங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.1,000 கோடியில் நிவாரண தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில்,  சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்ட ரூ.385 கோடியும் , 2.64 லட்சம் ஹெக்டர் அளவிலான விவசாய நிலங்களில் சேதமான பயிர்களுக்காக ரூ.250 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு வணிகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடனுதவி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். தகுதி வாய்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 350 கோடி ரூபாயில் கடனுதவி வழங்கப்படும். மேலும் நிலுவையில் உள்ள கடன்களுக்கு தவணைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி படகுகளுக்காக 15 கோடி ரூபாய் வரை நிவாரணத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்