திண்டிவனத்தில் துணிகரம் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் ரூ.1¼ லட்சம் கொள்ளை; மா்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டிவனத்தில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் ரூ.1¼ லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-09-22 18:45 GMT

திண்டிவனம், 

இருசக்கர வாகன விற்பனை ஷோரூம்

திண்டிவனம் செஞ்சி ரோட்டில் அமித் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது. இங்கு திண்டிவனம்-மரக்காணம் சாலையை சேர்ந்த சந்தோஷ்(வயது 39) என்பவர் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஷோரூமில் விற்பனையான மோட்டார் சைக்கிள்களுக்கான தொகை ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தை கல்லாப்பெட்டியில் வைத்து விட்டு, ஷோரூமை பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம்போல் சந்தோஷ் மற்றும் ஊழியர்கள் ஷோரூமை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணத்தை காணவில்லை. சந்தோஷ் ஷோரூமை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் ஷோரூமுக்குள் புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

கொள்ளை

இதனால் பதறிய சந்தோஷ் இதுபற்றி ரோஷணை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் செல்வராஜ், அசாருதீன் ஆகியோர் விரைந்து வந்து ஷோரூமில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில், கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை, முகம் முழுவதும் வெள்ளை துணியால் சுற்றிக் கொண்டு, கைகளில் கிளவுஸ் போட்டுக் கொண்டு வந்த மர்மநபர் ஒருவர் ஷோரூமின் பின்பக்க கிரில் கேட்டின் கம்பிகளை நெம்பி உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்