'ரூட் தல' பிரச்சினை: கடற்கரை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு கத்தியால் வெட்டு
‘ரூட் தல’ பிரச்சினையில் கடற்கரை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சக மாணவர்கள் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாக்குவாதம்
திருவள்ளூர் மாவட்டம் திருப்பச்சூர் பஜனை கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 20). இவர், சென்னை மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். நேற்று பிற்பகல் திருவள்ளூர் செல்லும் ரெயிலில் ஏறுவதற்காக சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் சத்தியமூர்த்தி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த மாநில கல்லூரி மாணவர்கள் 6 பேர் சத்தியமூர்த்தியிடம் எந்த ஊர்? என விசாரித்தனர். அவர் திருவள்ளூர் என பதிலளித்தார். அப்போது, நாங்கள் செல்லும் ரெயிலில் நீ வரக்கூடாது எனக் கூறினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
கத்தியால் வெட்டு
வாக்குவாதம் முற்றவே கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த மாணவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சத்தியமூர்த்தியை வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பித்து சத்தியமூர்த்தி ஓடினார். ஆனாலும், சத்தியமூர்த்தியை விடாமல் துரத்திய 6 பேரும் அவரின் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டினர். இதில், அவர் அலறித்துடித்தார். பின்னர், 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தைக் பார்த்த ரெயில் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
6 பேருக்கு வலை
தலையில் வெட்டுப்பட்ட சத்தியமூர்த்தி நிலைகுலைந்து கீழே விழுந்தார். அங்கிருந்த பயணிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் படுகாயம் அடைந்த சத்திய மூர்த்தியை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரையும் தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாநிலக்கல்லூரியில் படிக்கும் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மாணவர்கள் இடையே இருந்த 'ரூட் தல'பிரச்சினையால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதமும் இதே கடற்கரை ரெயில் நிலையத்தில் ரூட் தல பிரச்சினையால் கல்லூரி மாணவர்கள் கும்பலாக ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதில், ரெயில் பெட்டியின் கண்ணாடி உடைந்து சேதமானது. மின்சார ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் பயணியருக்கு இடையூறாக இதுபோன்ற பிரச்சினைகளில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு கடிவாளம் போடும் வகையில் ரெயில்வே போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.