அடிக்கடி பெயர்ந்து விழும் மேற்கூரை சிமெண்டு காரைகள்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மேற்கூரை சிமெண்டு காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுகின்றன. இதனால் நோயாளிகள் அச்சத்துடனே சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

Update: 2022-08-26 19:05 GMT

கடலூர், 

கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசு தலைமை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் 800-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்த ஆஸ்பத்திரி வளாகத்திலேயே தனியாக காச நோய் பிரிவும் செயல்பட்டு வருகிறது.

இங்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது முறையான பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தரைத்தளத்தை விட முதல் தளத்தில் உள்ள அனைத்து அறைகளின் சிமெண்டு காரைகளும் அவ்வப்போது பெயர்ந்து விழுந்து வருகிறது. இதில் ஒரு அறை முழுவதும் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் அனைத்தும் வெளியே தெரிகிறது.

பெயர்ந்து விழும் சிமெண்டு காரைகள்

இதேபோல் வராண்டா மற்றும் படிக்கட்டுகளின் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் முதல் தளத்தில் உள்ள அறைகளை பயன்படுத்தவே டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும் அச்சத்துடனே காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். எந்நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே அனைவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இதேபோல் பழைய மகப்பேறு பிரிவு கட்டிடமும், பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆகவே காச நோய் பிரிவு கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்படுவதற்குள், அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டவோ அல்லது அதனை சீரமைக்கவோ மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்