கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை
மங்கலம்பேட்டையில் கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மங்கலம்பேட்டை,
மங்கலம்பேட்டை மளிகை தெருவில் வசித்து வருபவர் கொளஞ்சி ஆனந்த் (வயது 40). கட்டிட மேஸ்திரி. இவர் தனது சொந்த ஊரான ரூபநாராயண நல்லூரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதை பார்ப்பதற்காக கொளஞ்சி ஆனந்த் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் ரூபநாராயணநல்லூருக்கு சென்றார். அங்கு வீட்டு வேலைகள் முடிந்ததும் இரவு அங்கேயே குடும்பத்துடன் தங்கி விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை மங்கலம்பேட்டையில் உள்ள வீட்டிற்கு கொளஞ்சி ஆனந்த் சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 8½ பவுன் நகை, வெள்ளி விளக்கு உள்ளிட்டவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை
இது குறித்த தகவலின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் விரைந்து சென்று, கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், கொளஞ்சி ஆனந்த் வீட்டை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் வீட்டு்க்குள் புகுந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் இருந்த தடயங்கள், கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதோடு, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.