வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

தேனி அல்லிநகரத்தில் வீடு புகுந்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

Update: 2023-07-26 21:00 GMT

தேனி அல்லிநகரம், ஊஞ்சாம்பட்டி கிருஷ்ணாநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவரது மனைவி அழகுமீனா (40). முருகனுக்கு நேற்று முன்தினம் அதிகாலை உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அழகுமீனா வீட்டை பூட்டிவிட்டு, தனது கணவரை சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இதற்கிடையே முருகனின் வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 10½ பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதற்கிடையே அன்றைய தினம் காலை 9 மணிக்கு அழகுமீனா வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்