தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் செல்லும் சாலையில் சமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் எதிரே உள்ள சாலையோரத்தில் வழிநெடுக குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற வேண்டும் என்று தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாரியம்மன்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாதனசேகர் உத்தரவின் பேரில் 60-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பைகள் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. குப்பைகள் சுத்தம் செய்யப்பட்ட பின்னர் அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த பகுதியில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது.