மெட்ரோ ரெயில் பணிகளால் சாலைகள் சேதம் அடைந்தால் உடனடியாக சீரமைக்கப்படும் - மெட்ரோ நிறுவனம்

ஓ.எம்.ஆர் நெடுஞ்சாலைகளில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிட்டதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2023-10-28 23:53 GMT

கோப்புப்படம்

சென்னை,

மெட்ரோ ரெயில் பணிகளால் சாலைகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சீரமைக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வரும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லி முதல் போரூர் வரை சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் இருபுறமும் நடைபெற்று வருகிறது.

தற்போது பூந்தமல்லி முதல் போரூர் நெடுஞ்சாலையில் 3.7 கி.மீ. நீளத்திற்கு சாலை போடப்பட்டு, அதாவது சாலை சீரமைப்பு பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஆற்காடு சாலையில் 11.6 கி.மீ. நீளத்திற்கு சாலை போடப்பட்டு, 87 சதவீதம் சாலை சீரமைப்பு பணிகளும், அதேபோல் மேடவாக்கம் சாலையில் 2 கி.மீ. நீளத்திற்கு சாலை போடப்பட்டு, 65 சதவீதம் சாலை சீரமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளது. மேலும் இந்த சாலைகளில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.

திருவொற்றியூர், மாதவரம் மற்றும் ஓ.எம்.ஆர் நெடுஞ்சாலைகளிலும் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் பழுதுபார்க்கப்பட்டு சீரமைக்கப்பட்டுவிட்டன. வடகிழக்கு பருவமழையை கருத்தில்கொண்டும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதியும் சாலை சீரமைக்கும் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வரும் அனைத்து இடங்களிலும் சாலைகள் சேதமடைந்தால் உடனடியாக அந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்