சாலை மறியல் விளக்க கூட்டம்
திருநந்திக்கரையில் சாலை மறியல் விளக்க கூட்டம்
குலசேகரம்,
திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட திருநந்திக்கரை அருகே திற்பரப்பு, குலசேகரம், திருவட்டார் மற்றும் ஆற்றூர் ஆகிய 4 பேரூராட்சிகளின் கூட்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இந்தநிலையில் திற்பரப்பு பேரூராட்சிப் பகுதியில் பிற பேரூராட்சிகளின் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க திற்பரப்பு பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் பிற பேரூராட்சிகளின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் திற்பரப்பு பேரூராட்சிப் பகுதியில் அமைக்கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருநந்திக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதி கிளைகள் சார்பில் திருநந்திக்கரையில் நேற்று மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் வருவாய்த் துறை அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டு மறியல் விளக்கப் பொதுக்கூட்டமாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு திற்பரப்பு பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்டாலின் தாஸ் தலைமை தாங்கினார். 9-வது வார்டு உறுப்பினர் ஷீஜா சந்திரன் மற்றும் கிருஷ்ணன்குட்டி, சுதீஷ், ஹரீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், திருநந்திக்கரை கூட்டுறவு வங்கி தலைவர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.