பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
நாமக்கல்லில் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வினியோகம் இல்லை
நாமக்கல் - திருச்சி சாலையில் எஸ்.கே.நகர் உள்ளது. இங்கு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு அமைந்து உள்ளது. இந்த குடியிருப்பில் 198 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த காலங்களில் தினசரி காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று நாமக்கல் - திருச்சி மெயின்ரோடு எஸ்.கே.நகர் பிரிவு பகுதியில் திடீரென காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் தினசரி ஒரு குடம் ரூ.5 கொடுத்து வாங்கி உபயோகிக்க வேண்டிய நிலை இருப்பதாக குற்றம்சாட்டினர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த நாமக்கல் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
குடிசை மாற்று வாரியம் குடிநீர் வழங்கும் துறைக்கு ரூ.4.5 லட்சம் பாக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்களிடம் இருந்து மாதந்தோறும் குடிநீர் கட்டணத்தை வசூல் செய்து, மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலைமறியலில் ஈடுபட்ட நபர்கள் கூறினர்.