கழிவுநீர் கால்வாய் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

முத்துநாயக்கன்பட்டி மூலக்கடை பகுதியில் கழிவுநீர் கால்வாய் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-09-19 18:40 GMT

சூரமங்கலம்

சாலைமறியல்

சேலம் சூரமங்கலத்தை அடுத்த முத்துநாயக்கன்பட்டி ரோடு மூலக்கடை பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி அந்த பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை மூலக்கடை பகுதியில் சாலையில் திரண்டு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கழிவுநீர் செல்வதற்கு வசதியாக கால்வாய் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்