சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அருப்புக்கோட்டை நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-03-31 19:55 GMT

அருப்புக்கோட்டை,

சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அருப்புக்கோட்டை நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகரசபை கூட்டம்

அருப்புக்கோட்டை நகர்மன்ற குழுவின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ரவீந்திரன், நகர் நல அலுவலர் ராஜநந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகள் வருமாறு:-

முருகானந்தம்:- குழந்தைவேல்புரம் தெரு பகுதியில் புதிய கழிப்பறை கட்டித்தர வேண்டும். பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

ராம திலகவதி: பட்டாபிராமர் கோவில் தெருவில் பல ஆண்டுகளாக சுகாதார வளாகம் பயன்பாடின்றி உள்ளது. இப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

செந்திவேல்: நகராட்சி மயானத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

ஆக்கிரமிப்பு

ஜெய கவிதா:- தெற்கு தெரு விரிவாக்க பகுதியில் மது குடித்து விட்டு சாலையில் செல்பவர்களால் பொது மக்கள் அச்சப்படுகின்றனர். பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

இளங்கோ: எங்கள் பகுதியில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். மாகாளியம்மன் கோவில் பின்புறம் சாலை தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கண்ணன்:- சாலை போடுவதற்காக ஜல்லிக்கற்கள் போட்டு 3 மாதங்கள் ஆகியும் பணிகள் நடைபெறவில்லை. நேரு நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகர்மன்ற தலைவர் உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்