லிங்கவாடி-மலையூர் இடையே ரூ.7½ கோடியில் தார்சாலை; நத்தம் ஒன்றியக்குழு தலைவர் தகவல்

லிங்கவாடி-மலையூர் இடையே ரூ.7½ கோடியில் தார்சாலை அமைக்கப்படுகிறது என்று நத்தம் ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.

Update: 2023-07-14 21:00 GMT

நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட அறிக்கையை இளநிலை உதவியாளர் கருப்பணபிள்ளை வாசித்தார். இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் தங்களது வார்டு பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து முறையிட்டனர். அதற்கு ஒன்றியக்குழு தலைவர் மற்றும் அலுவலர்கள் பதில் அளித்தனர். பின்னர் கூட்டத்தின்போது ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் பேசியதாவது:-

நத்தம் அருகே லிங்கவாடி-மலையூர் இடையே ரூ.7½ கோடியில் தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சாலை பணிகள் தொடங்கும். சின்னமலையூர், பெரியமலையூர், கரந்தமலை வலசு ஆகிய 3 கிராமங்களில் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நத்தம் ஒன்றிய பகுதியில் செல்லும் மதுரை-துவரங்குறிச்சி நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் நலன்கருதி தேவையான இடங்களில் குடிநீர் வசதி செய்துதர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இடித்து அகற்றப்பட்ட பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்ட மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தப்படும். வரும்காலங்களில் அரசின் நிதிகள், ஒன்றியம் முழுவதும் முறையாக பிரித்து வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். அதன்பிறகு வரவு-செலவு உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் அலுவலக மேலாளர் சாந்தி தேவி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்