ரூ.2 கோடியில் சாலை விரிவாக்கம்
ஊட்டி-மஞ்சூர் இடையே ரூ.2 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.;
ஊட்டி-மஞ்சூர் இடையே ரூ.2 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
சாலை விரிவாக்கம்
நீலகிரி மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர்-ஊட்டி வழியாக கூடலூர் செல்லும் சாலை 7 மீட்டரில் இருந்து 11 மீட்டராக விரிவுபடுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து முடிந்தது.
குன்னூரில் இருந்து காட்டேரி வழியாக ஊட்டிக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் விபத்து அபாயம் அதிகம் உள்ள குறுகலான, வளைவான பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டி சாலையை விரிவாக்கம் செய்ய மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு உள்ளது.
ஒரு மாதத்திற்குள் முடிக்க திட்டம்
அதன் ஒரு பகுதியாக ஊட்டி-மஞ்சூர் சாலையில் சாம்ராஜ் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் பகுதி மற்றும் தாம்பட்டி சந்திப்பு பகுதியில் ஆபத்தான வளைவு, ஊட்டி-கோத்தகிரி சாலையில் அம்பேத்கர் நகர் அருகில் ஆபத்தான வளைவு ஆகிய 3 இடங்களிலும் முதல் கட்டமாக சாலையை அகலப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகள் கடந்த வாரம் தொடங்கி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஆபத்தான மற்றும் வளைவான பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டி சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ரூ.90 லட்சம் செலவில் ஊட்டி-கோத்தகிரி சாலையில் உள்ள அம்பேத்கர் நகரிலும், ஊட்டி-மஞ்சூர் சாலையில் உள்ள சாம்ராஜ் பகுதி அருகே ரூ.70 லட்சம் செலவிலும், தாம்பட்டி சந்திப்பில் ரூ.40 லட்சம் செலவிலும் விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை அடுத்த ஒரு மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.