ரூ.34 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

அம்பலமூலா-மேல் சேமுண்டி இடையே ரூ.34 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Update: 2022-10-10 18:45 GMT

கூடலூர், 

அம்பலமூலா-மேல் சேமுண்டி இடையே ரூ.34 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் அவதி

கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி அம்பலமூலாவில் இருந்து மேல் சேமுண்டிக்கு 1½ கிலோ மீட்டர் தூரம் சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் கிராம மக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

இதேபோல் கர்ப்பிணிகள், வயதானவர்களை ஆஸ்பத்திரிகளுக்கு வாகனங்களில் விரைவாக கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் பழுதடைந்த சாலையை புதுப்பிக்க வேண்டுமென கிராம மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இதைதொடர்ந்து தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தொடங்குவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

சாலை பணி தொடக்கம்

ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரெஜி மேத்யூ முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பழுதடைந்த சாலை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து அகற்றப்பட்டு வருகிறது.

இந்த பணி முழுமை பெற்ற பிறகு, புதியதாக ஜல்லி கற்கள் கலவை கொண்ட தார் சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுற்று வட்டார கிராம மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பழுதடைந்த சாலையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். தற்போது புதிய சாலை அமைக்கப்படுவதால், நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்