மகளிர் உரிமைத்தொகை வழங்க கோரி செஞ்சியில், பெண்கள் சாலை மறியல்
செஞ்சியில் மகளிர் உரிமைத்தொகை வழங்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி,
செஞ்சி அடுத்த மேல் ஒலக்கூரில் உள்ள தகுதியான குடும்ப பெண்கள் சிலருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர், முற்போக்கு மகளிர் முன்னணி சங்கம் சார்பில், மாவட்ட அமைப்பாளர் சுசீலா தலைமையில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையேற்ற அவர்கள், போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.