வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியத்தொகை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல்

வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியத்தொகை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 535 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-30 14:59 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பணப்பயன்கள், பஞ்சப்படி, பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியத்தொகை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை பல்லவன் சாலையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் அரை நிர்வாணத்தில், இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டும், உடலில் நாமத்தை வரைந்தும், பிச்சை எடுத்தும் நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள்.

பின்னர் பல்லவன் சாலையில் இருந்து அண்ணா சாலையை நோக்கி தொழிலாளர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்கள் அண்ணா சாலைக்கு வந்துவிடாதபடி, போலீசார் தடுப்பு வேலி அமைத்து இருந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் தடுப்பு வேலியை அகற்றி முன்னேற முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடுப்பு வேலியை தாண்டி, தொழிலாளர்கள் அண்ணா சாலைக்கு வந்ததோடு, சாலையில் அமர்ந்தும், படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை தடுக்க வந்த போலீஸ் அதிகாரிகளின் காலில் விழுந்து, 'கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லுங்கள்' என்று கெஞ்சினர். போலீசார் தடுப்பையும் மீறி சாலை மறியலில் தொழிலாளர்கள் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நீடித்தது. இதனால் அந்த பகுதி வழியாக கடந்து சென்ற வாகன ஓட்டிகள், பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து பெண் தொழிலாளர்கள் 35 பேர் உள்பட 535 பேரை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்