தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

திருக்கோவிலூர் அருகே தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலிலில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-20 18:45 GMT

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே சு.பில்ராம்பட்டு கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணி செய்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் லதா மற்றும் கல்பனா ஆகியோர் தலைமையில் அதே ஊரில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே திருக்கோவிலூர்-கண்டாச்சிபுரம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், நாராயணன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்