ரோச் பூங்காவுக்கு பதிலாக எம்.ஜி.ஆர். பூங்கா அருகே குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு

ரோச் பூங்காவுக்கு பதிலாக எம்.ஜி.ஆர். பூங்கா அருகே குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

Update: 2022-10-21 18:45 GMT

தூத்துக்குடியில் ரோச் பூங்காவுக்கு பதிலாக எம்.ஜி.ஆர். பூங்கா அருகே குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

குரூஸ்பர்னாந்து

தூத்துக்குடி மாநகர தந்தை என்று அழைக்கப்படுபவர் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து. அவருக்கு நகரின் மையப் பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது மீனவ மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்பேரில் ரோச் பூங்காவில் மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்து நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு மீனவ மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது.

பேச்சுவார்த்தை

இதைத் தொடர்ந்து மீனவ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் நேற்று அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்குமார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ் குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற அமைப்பாளர் எட்வின் பாண்டியன், தலைவர் ஹெர்மன் கில்டு, செயலாளர் சசிக்குமார், பொருளாளர் டெரன்ஸ், பரதர் நலச்சங்க தலைவர் ரெனால்டு வி.ராயர் மற்றும் மீனவ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குரூஸ்பர்னாந்து மணி மண்டபத்தை நகரின் மைய பகுதியில் அமைக்க வேண்டும், தற்போது உள்ள சிலை அதே இடத்தில் இருப்பதற்கு மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில்,

எம்.ஜி.ஆர். பூங்கா

தூத்துக்குடி ரோச் பூங்காவில் மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் குரூஸ் பர்னாந்தின் உறவினர்கள், அவரை பின்பற்றுபவர்கள், ஆதரவாளர்கள், பல்வேறு சமூக ஆர்வலர்கள் அந்த இடத்தில் மணி மண்டபம் அமைக்க வேண்டாம் என்று தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். பூங்காவை ஒட்டி கிழக்கு பகுதியில் உள்ள சுமார் 20 சென்ட் காலி இடத்தில் மணிமண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இங்கு குரூஸ் பர்னாந்துக்கு ரூ.82 லட்சத்தில் உருவச்சிலை மற்றும் சுற்றுச்சுவருடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள பழைய சிலை அப்புறப்படுத்தப்படாமல் அதே இடத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்படும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்