கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

கோத்தகிரி-குன்னூர் சாலையோரத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் உடனடி நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Update: 2022-12-08 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி-குன்னூர் சாலையோரத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் உடனடி நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அடிக்கடி விபத்துகள்

கோத்தகிரியில் இருந்து குன்னூர் மற்றும் ஊட்டிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக குன்னூர், ஊட்டி மட்டுமின்றி ஏராளமான குக்கிராமங்களுக்கு அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோத்தகிரி பஸ் நிலையம் அருகே உள்ள காம்பாய்கடை முதல் அய்யப்பன் கோவில் வரை சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு பொக்லைன் எந்திரங்கள், கனரக லாரிகள், வாகனங்களை கட்டி இழுத்து செல்லும் டோயிங் எந்திர வாகனம், கழிவுநீர் சேகரிக்கும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் சாலையின் அகலம் குறுகியுள்ளதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவது வாடிக்கையாகி வருகிறது.

உடனடி நடவடிக்கை

கடந்த ஒரு ஆண்டில் இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளதுடன் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கடந்த வாரம் நெடுஞ்சாலை துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்து மிகவும் அகலமாக கான்கிரீட் போடப்பட்டது. ஆனால் இதை சாதகமாக பயன்படுத்தி மீண்டும் கனரக வாகனங்களை அதே பகுதியில் நிறுத்த தொடங்கி உள்ளனர். இதனால் இந்த சாலையில் மீண்டும் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த பிரதான சாலையோரங்களில் கனரக வாகனங்களை நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்