சேதமடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சேதமடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2022-11-23 20:03 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,


ஸ்ரீவில்லிபுத்தூரில் சேதமடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆண்டாள் கோவில்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த ஆண்டாள் கோவில், தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில், தரகுமலை மாதா கோவில் உள்பட பல்வேறு சிறப்பு மிக்க கோவில்கள் உள்ளன.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தென்காசி, குற்றாலம், கொல்லம், சபரிமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லலாம். இதனால் இந்த சாலை வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இந்திரா காலனி முதல் மடவார் வளாகம் இடையே எல்.ஐ.சி. சந்திப்பு, கிளை சிறை முன்பு வரை பல இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

போராட்டம்

இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஏற்கனவே ஸ்ரீீவில்லிபுத்தூர் நகரில் வாகன விபத்துகள் அதிகம் ஏற்படும் நிலையில் தற்போது சாலைகளில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருப்பதால் மேலும் விபத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடைபெறுகிறது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்