தஞ்சையில் மாற்றியமைக்கப்பட்ட வரி உயர்வு பாதியாக குறைப்பு

தஞ்சையில் மாற்றியமைக்கப்பட்ட வரி உயர்வு பாதியாக குறைப்பு

Update: 2022-09-29 20:16 GMT

தஞ்சையில் மாற்றியமைக்கப்பட்ட வரி உயர்வு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

மாநகராட்சி கூட்டம்

தஞ்சை மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் டாக்டர்அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார், பொறியாளர் ஜெகதீசன், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியது வருமாறு:-

மண்டலக்குழு தலைவர் ரம்யாசரவணன் (தி.மு.க.) :- அண்ணாநகர், விளார்சாலை நுழைவு பாலம் பழுது அடைந்துள்ளதால் அதனை விரிவுபடுத்தி புதிய பாலம் கட்டித்தர வேண்டும்.

சாக்கடை கட்டுமான பணி

கோபால் (அ.தி.மு.க.) :- தீபாவளி பண்டிகை நெருங்குவதால், மேலவீதி, தெற்கு வீதி, தெற்கலங்கம் ஆகிய பகுதிகளில் சாக்கடை கட்டுமான பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதை விரைவு படுத்த வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும்.

கண்ணுக்கினியாள் (அ.ம.மு.க.) :- மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் திரும்ப பெற வேண்டும். எனது வார்டில் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது.

வேகத்தடை அமைக்க வேண்டும்

ஜெய்சதீஷ் (பா.ஜ.க.) :- எனது வார்டில் பாதாள சாக்கடை மெயின் லைனில் அடைப்பு ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. பாதாள சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் புகுந்து மழைகாலங்களில் வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன் (அ.தி.மு.க) :- சீனிவாசபுரம் ராஜாஜி சாலையில் வேகத்தடை அமைத்து தர வேண்டும். 51 வார்டு கவுன்சிலர்களுக்கும், அந்தந்த வார்டுகளில் அலுவலகம் கட்டித் தர வேண்டும்.

சாலையோர கடைகள்

சர்மிளாதேவி ராஜா (தி.மு.க.) :- ஈஸ்வரிநகர் இடதுபுறம், மருத்துவக்கல்லூரி முதல்கேட் ஆகிய இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். ஈஸ்வரிநகர், தேவன்நகரில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும்.

காந்திமதி (அ.தி.மு.க.) :- தீபாவளி பண்டிகையையொட்டி தஞ்சை மாநகரில் அமைக்கப்படும் சாலையோர கடைகள் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்டெல்லா (தி.மு.க.) :- ரத்த சோகை நோய் தஞ்சை மாநகரில் அதிகமாக உள்ளதால் இதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

சசிகலா அமர்நாத் (தி.மு.க.):- மேலஅலங்கத்தில் 13 வீடுகள் அகற்றப்படுகிறது. அவர்களுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாதியாக குறைப்பு

இதற்கு பதிலளித்து மேயர் மேயர். சண்.ராமநாதன் பேசியதாவது:- மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு பொதுமக்களின் கஷ்டத்தை உணர்ந்து தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் ரூ.83 கோடிக்கு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு முதல்-அமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து நிதி கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட் புதிய கட்டிடத்தில் விரைவில்செயல்படும்."என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்