நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரியால் சென்னை மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க மிகப்பெரிய திட்டம் செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Update: 2022-11-14 07:59 GMT

அமைச்சர்கள்

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,180 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு அடையாறு ஆறு வழியாக கடலில் கலந்து வருகிறது. கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், ஏரியை வேடிக்கை பார்ப்பதற்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் தா. மோ.அன்பரசன் ஆகியோர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் நீரை பார்வையிட்டனர். தொடர்ந்து ஏரியை இரவு பகல் முழுவதும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அவருடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் எம்.ஆர்த்தி, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முரளிதரன், முதன்மை பொறியாளர் ராமமூர்த்தி, செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம் ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.

உபரி நீர் வெளியேற்றம்

பின்னர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள மதகுகளின் ஷட்டர்கள் வழியாக 1,180 கன அடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. அவை நேரடியாக அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் கால்வாய்களும் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

மிகப்பெரிய திட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி (3.6 டி.எம். சி) ஆகும். அதில் இருப்பு 2,728 மில்லியன் கனஅடி ஆக உள்ளது. உபரி நீர் வெளியேறும் அடையாறு ஆறு தூர்வாரப்பட்டு அகலப்படுத்தப்பட்டு பாதுகாப்பான வகையில் உள்ளது. வருகிற 16-ம் தேதி கனமழை இருக்கும் என்று கூறப்படுகிறது ஆனால் அதனையும் சந்திக்க தமிழக அரசும், அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கனமழை பெய்தாலும் செம்பரம்பாக்கம் ஏரியால் சென்னை வாழ் மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் மிகப்பெரிய திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறோம். இது குறித்து முதல்-அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் எம்.ஆர்த்தி கூறியதாவது:-

தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியிலிருந்து 1,180 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்காக தினமும் 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நேற்று மாலை தண்ணீர் திறப்பு 750 கன அடியாக குறைக்கப்பட்டது என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்