ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு, வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு, வங்கி இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-23 18:14 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா நிண்ணியூர் மேற்குத்தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 63). இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவரது குடும்ப நண்பரின் மகன் அனந்தகுமார் என்பவர், மருத்துவ படிப்பு பயில்வதற்காக கல்விக்கடன் பெற்றிருந்தார். அவர் பெற்ற கடனுக்கான விண்ணப்பத்தில் கண்ணன் ஜாமீன் கையெழுத்திட்டிருந்தார்.

பின்னர் அனந்தகுமார் பல மாதங்கள் கல்விக்கடன் செலுத்தாததால், கண்ணனின் சேமிப்பு கணக்கில் வைத்திருந்த சுமார் ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்தை வங்கி நிர்வாகம் முடக்கி வைத்திருந்தது. மேலும் கண்ணன் கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றபோது பணி ஓய்வு விழாவை நடத்துவதற்கு சுமார் ரூ.1 லட்சம் சேமிப்பு கணக்கில் இருந்தும், ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க முடியாமல் போனது. தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது மருத்துவ செலவிற்கும் தனது கணக்கில் இருந்து அவரால் பணம் எடுக்க முடிவில்லை. இது தொடர்பாக கண்ணன் வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டார். மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல்களை பெற விண்ணப்பித்தும், தனது சேமிப்பு கணக்கு முன் அறிவிப்பின்றி முடக்கப்பட்டதற்கான சரியான தகவலை கண்ணன் பெறமுடியவில்லை. இதற்கிடையே அனந்தகுமார் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு டாக்டராக அரசுப்பணியில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு வங்கியில் கடனை ஒரே தவணையாக ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்து 423 நிலுவையை முழுமையாக செலுத்தி உள்ளார். இதற்கிடையே இந்த சம்பவத்தில் மன உளைச்சல் அடைந்த கண்ணன், பெரம்பலூர் வழக்கறிஞர் செல்வராஜ் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்ற தலைவர் ஜவஹர் மற்றும் உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து வங்கியின் சேவை குறைபாட்டினால், கண்ணனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியமைக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரமும் வங்கியின் நிர்வாகம் வழங்க வேண்டும், என்று உத்திரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்