ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
கம்பைநல்லூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
மொரப்பூர்
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
கம்பைநல்லூர் அருகே உள்ள வெதரம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது65). ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.சம்பவத்தன்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய மனைவி கோவிந்தம்மாள் தோட்டத்திற்கு சென்று தேடினார்.
அப்போது கிணற்று அருகே சின்னசாமியின் காலணிகள் மற்றும், செல்போன் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் கிணற்றில் பார்த்தார். அப்போது சின்னசாமி கிணற்றில் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கும், அரூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்து சின்னசாமியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். என்ஜினை இயக்க கிணற்றில் இறங்கியபோது சின்னசாமி தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.