பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-06-13 15:57 GMT

பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணிக்கையாக அவற்றில் போட்டு செல்கின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அவை கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்படுகிறது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனி கோவில் பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் ஈடுபடுகின்றனர்.

கடந்த முறை நடந்த உண்டியல் எண்ணும் பணியின்போது நகை திருடு போன சம்பவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் செய்யப்பட்டு கோவில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுவோர்களுக்கு கோவில் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் தினம் காலை 6.15 மணிக்குள் பணி நடக்கும் மண்டபத்துக்குள் வந்து வருகை பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டும். வராத பணியாளர்களுக்கு விடுப்பு கருதப்பட்டு ஊதியம் பிடிக்கப்படும். ஆண் பணியாளர்கள் வேட்டி அணிய வேண்டும்.

மேலும அனைவரும் ெகடிகாரம், மோதிரம், காப்பு, வளையல் போன்ற நகைகள் அணிந்து வரக்கூடாது. உண்டியல் எண்ணிக்கை பணி நிறைவுபெற்ற பின்பு வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு செல்ல வேண்டும். மதிய உணவு அருந்த செல்லும்போதும், கழிப்பிடத்துக்கு சென்று வரும்போதும் வருகை பதிவேட்டில் நேரத்தை குறிப்பிட்டு கையொப்பம் இட வேண்டும் என்பன உள்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்